வியாழன், 12 நவம்பர், 2009

எனது திருநெல்வேலி பயணம்...

எனது திருநெல்வேலி பயணம்...

நான் அண்மையில் (டிசம்பர் 2008) திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி சென்று வந்தேன். திருச்செந்தூருக்கு நேரடி இரயில் இல்லாததால் தூத்துக்குடி வரை இரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக திருச்செந்தூர் சென்று அடைந்தோம். கோவிலின் அருகிலேயே பேருந்து சென்றது. (சில பேருந்துகள் மட்டுமே கோவிலுக்கு அருகில் செல்கின்றன) கோவிலின் அருகில் கோவில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட விடுதிகள் நிறைய இருக்கின்றன. (ரூபாய் 80 முதல் 100 வரை). தனியார் விடுதிகளும் இருக்கின்றன. கோவிலில் தரிசனம் செய்வதற்காக மதியம் சென்றோம்.


அங்கு பல அர்ச்சகர்கள் வெளியிலேயே நின்று கொண்டு கோவிலுக்கு வருபவர்களை மறித்து, நான் அர்ச்சனை செய்கிறேன் என்று சொல்லி பணம் பறிக்கிறார்கள். கோவில் நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. கோவில் தூய்மையாக பராமரிக்கப்படுவதில்லை. தரிசனம் முடித்து மாலையில் அருகிலுள்ள கடற்கரைக்கு சென்றோம். நிறைய பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தார்கள். திருச்செந்தூரில் சரவணபொய்கை, நாழி கிணறு மற்றும் கடலில் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் விடுதியிலேயே குளித்து விட்டதால் அங்கு குளிக்க வில்லை. தண்ணீர் மட்டும் மேலே தெளித்துக் கொண்டோம்.


திருச்செந்தூரில் இருந்து அன்று மாலை குலசேகரபட்டினம் சென்றோம் (பேருந்தில் 20-30 நிமிட பயணம்). இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை மைசூருக்கு அடுத்த படியாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுவும் கடற்கரை நகரம். முற்காலத்தில் இது துறைமுக நகரமாக இருந்தது. தசரா பண்டிகையின் போது கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக இருக்கும். இந்த பண்டிகையின் போது மக்கள் பல வேடங்களில் ஒப்பனை செய்து கொண்டு அம்மனுக்கு வழிபாடு செய்வர்.



திருச்செந்தூரில் காலையில் சூரியன் உதிப்பது பார்க்கலாம். நாங்கள் மறுநாள் காலையில் 6 மணிக்கு கடற்கரைக்கு சென்றோம். ஆனால் அன்று வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய உதயம் சரியாக பார்க்க முடியவில்லை.

காலை சூரிய உதயம் முடிந்தவுடன் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி புறப்பட்டோம்.(பேருந்தில் 90 நிமிட பயணம்-14 ரூபாய்) திருநெல்வேலியில் காலை உணவு முடித்து அங்கிருந்து கிருஷ்ணாபுரம் சென்றோம்.( திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கம் 20-30 நிமிட பயணம்-4 ரூபாய்-புதிய பேருந்து நிலையத்திலிருந்து). நாங்கள் சென்ற நேரம் 12 மணி கோவில் மூடியிருந்தது. (காலை 5 மணி முதல் 11.30 வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்).





கோவில் காப்பாளர் ஒருவர் அங்கு இருந்தார். அவர் எங்களுக்கு கோவில் உள் பிரகாரத்தில் உள்ள அற்புதமான 16 ஆம் நூற்றாண்டு சிற்பங்களை காண்பித்து அவை பற்றி விளக்கமாக கூறினார். அந்த சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன.


நாடோடி மங்கையின் நடன அசைவுகள், குறத்தி ராஜகுமாரனை தோளின் மீது வைத்து கடத்துவது, அர்ஜுனன் தவக்கோலம், குறவன் ராஜகுமாரியை தோளின் மீது வைத்து கடத்துவது, பூலோக ரம்பை, ரதி, மன்மதன், பீமன் புருஷமிருகத்துடன் சண்டையிடுவதும் பார்க்க அழகாக இருந்தது. இவையெல்லாம் ஒவ்வொரு தூண்களில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன. நரம்புகள் புடைத்துக் கொண்டிருப்பதுவும், முட்டி எலும்புகள் அமைப்பும், விரல் நகங்களும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன.




ஒரு தூணில் காலையும் யானையும் ஒரே தலையுடன் செதுக்கப்பட்டிருந்தன. ஒரு புறம் பார்த்தால் யானை தலையுடனும், மறுபுறம் பார்த்தால் காளை தலையுடனும் தெரிகிறது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் இவற்றை புகைப்படம் எடுக்க முடியவில்லை. ஒரு சில படங்கள் எனது செல்போன் மூலம் எடுத்தேன். (காப்பாளன் "அனுமதி"யுடன் ).கோவில் கருவறை மூடியிருந்ததால் சாமி தரிசனம் செய்ய இயலவில்லை.



மதியம் திருநெல்வேலியில் மதிய உணவு முடித்து, மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றோம். ஒரு பிரமாண்டமான கோவில் நெல்லை நகரத்தின் நடுவே இருக்கிறது. நெல்லையப்பர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.





திருநெல்வேலி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தலைநகரமாக இருந்தது.  திருநெல்வேலி பெயருக்கு பின்னால் ஒரு பெயர்க் காரணமும் உண்டு.
கோவிலைப் பற்றி கேட்ட போது அங்கிருந்த பெரியவர்கள் சொன்னது.
முன்னொரு காலத்தில் வேத சர்மா என்றொரு ஏழை பிராமணன் வசித்து வந்தான். அவன் மிகச்சிறந்த சிவ பக்தன். தினமும் அவன் பிச்சையெடுத்து அதில் கிடைக்கும் பொருளைக் கொண்டு கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்வான். ஒரு நாள் அவன் தான் தானமாகப் பெற்ற நெல்லை சிவனுக்கு படைப்பதற்காக காய வைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது திடீரென்று மழை பெய்து நெல்லை எல்லாம் அடித்து சென்று விடுவது போல் இருந்தது.
பிராமணன் பயந்தவாறு கடவுளை பிரார்த்தித்தான். கடவுள் அவன் மேல் கருணை கொண்டு நெல்லை பாதுகாப்பதற்க்காக அதனைச் சுற்றி வேலி போல் பாதுகாப்பாக நின்றார். அதனால் அந்த இடத்திற்கு பெயர் திரு-நெல்-வேலி என்று வந்தது. நெல்லை பாதுகாத்ததால் கடவுளுக்குப் பெயர் நெல்லையப்பர் என்று அது முதல் வழங்கலாயிற்று. தேவியின் பெயர் காந்திமதி (ஒளி பொருந்திய நிலவு என்று அர்த்தம்).

கோவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்டது. கோவிலில் அழகான மண்டபங்களும் குளமும் உள்ளது. இங்கு உள்ள 1000 தூண் உள்ள மண்டபத்தில் ஐப்பசி மாதத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமண வைபோகம் விமரிசையாய் நடைபெறும். வசந்த மண்டபத்தில் ஏப்ரல் - மே மாதங்களில் வசந்த உற்சவம் நடைபெறும். இங்கு உள்ள மற்றொரு மண்டபம் மணி மண்டபம், இதில் 48 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணை தட்டினாலும் வித்தியாசமான இசையை எழுப்பியது. இங்கு உள்ள நந்தி தஞ்சாவூர் மற்றும் ராமேஸ்வரம் கோவிலில் உள்ளது போல் மிகப் பெரியதாக இருந்தது.

இந்த கோவில் பல வரலாற்று நாயகர்களுடன் தொடர்புடையது. கோவிலின் தென்கிழக்கு மூலையில் உள்ள பிரகாரத்தில் உள்ள லிங்கம் அனைவரத கான் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஒரு நவாபின் மனைவி தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாள், அவர் பிரமனர்களிடம் நோய் தீர வழி கேட்ட போது அவர்கள் நெல்லையப்பரை பூஜை செய்து வழிபட சொன்னார்கள். அந்த ராணி அதன் படி செய்தாள், அனைவரும் ஆச்சரியப்படும்படி அந்த முஸ்லிம் ராணியின் நோய் தீர்ந்தது மட்டுமில்லாமல் அவளுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் அனவரத கான். அவர்களின் நினைவாக கோவிலின் ஒரு மூலையில் சிறிய பிரகாரம் கட்டப்பட்டது. அதனால் அனவரத லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் வெளிப்புறத்திலிருந்து நவாபும் அவர் மகனும் வழிபடுவதற்காக, இந்த பிரகாரத்தின் வெளிப்புற சுவற்றில் கோவிலுக்கு எதிராக ஒரு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.






1 கருத்து: